வெள்ளம் பாதித்த பகுதிகளில் மகாராஷ்டிரா முதல்வர் நேரில் ஆய்வு!
மகாராஷ்டிராவில் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியான ராய்கட்டில் உள்ள தலாய் கிராமத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. எனவே பல இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் போது 36 வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில், 47 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 136 பேர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் ராய்கட்டில் உள்ள தலாய் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.