பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்திய பெற்றோர்களை “சாவுங்க” என கூறிய மத்திய பிரதேச அமைச்சர்!
மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வலியுறுத்தி தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை போய் சாவுங்க எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலித்ததால் பள்ளி கட்டணத்தை குறைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பரமர் அவர்களது இல்லத்திற்கு பெற்றோர்கள் நேரில் சென்று உள்ளனர். ஆனால் பெற்றோர்களின் கருத்தை கேட்க மறுத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர், போய் சாவுங்க அல்லது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் பெற்றோர்கள் சங்கம் அமைச்சர் இந்தர் சிங் மன்னிப்பு கோர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதுடன், இவர் மீது அவதூறு வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இவரது பேச்சு தொடர்பாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்களின் ஊடக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஆகியோர் பேசுகையில், பெற்றோர்கள் சங்கம் நிவாரணம் கோரி அமைச்சரை சந்திக்க சென்ற பொழுது பொறுப்பற்ற முறையில் பெற்றோர்களை நடத்திய அமைச்சர் இந்தர் சிங், போய் சாவுங்க யாரும் கவலைப்பட மாட்டார்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் நாங்கள் சாக வேண்டுமா என கூறியபொழுது ஏன் சாகவேண்டும் பொறுமையாக இருங்கள் என்ன விவகாரம் என்று தெரிந்துகொண்டு நான் பிரச் சினைகளை தீர்ப்பேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.