மத்திய பிரதேசம்:ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்கும் மின்சார வாரியம்.!
மத்திய பிரதேசத்தில் உள்ள மின்சார வாரியம் ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் மின்சார செலவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பலர் மின்சார கட்டண உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மேற்கு பிராந்திய மின் விநியோக நிறுவனம் ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலைமை பொது மேலாளர், கடந்த பல ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் நிறுவனத்தின் வருமானம் சரிந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்த மின் விநியோக நிறுவனம் 16 மாவட்டங்களில் உள்ள 4.5 மில்லியன் பயனர்களுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்வதாகவும், இதில் ஏழரை லட்சம் பயனர்கள் தங்களது மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை, அதற்காக பலமுறை எச்சரித்துள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால் அவர்களது மின்சார இணைப்பை துண்டிப்பதற்பான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.