மத்திய பிரதேசம் – நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை.!
மத்தியப் பிரதேசத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக நடந்த தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை.
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் பழைய நிலத் தகராறில் ஏற்பட்ட சண்டை வன்முறையாக வெடித்தது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், படுகாயமடைந்த மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மொரேனாவின் லெபா கிராமத்தில் இன்று நடந்துள்ளது, இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பழைய நிலத்தகராறு காரணமாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங்கின் குடும்பங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், தீர் சிங்கின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடந்த 2013ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாகவும், கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இரு குடும்பத்தினருக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்பின் கஜேந்திர சிங்கின் குடும்பத்தினரும் அதே கிராமத்தில் குடியேறினர்.
இந்த சமயத்தில், இன்று காலை, தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில், கஜேந்திர சிங்கின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர், இறுதியில், ஷைமு மற்றும் அஜித் (தீர் சிங்கை சேர்ந்தவர்) மற்ற குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நிலைமை வன்முறையாக மாறியது. அப்போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
மேலும், இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதுதொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது