மக்களவை தேர்தல்: 3.40 லட்சம் வீரர்களை களத்தில் இறக்க தேர்தல் ஆணையம் முடிவு!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடி அமைத்தல், வாக்கு இயந்திரம் சரிபார்த்தல், அழியா மை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், தேசிய கட்சிகள் உட்பட மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். இந்த நிலையில், மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்காக, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த 3.40 லட்சம் மத்திய ஆயுதக்காவல் படை வீரர்கள் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!
அதன்படி, வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகத்திடம் அதிகபட்சமாக சுமார் 3,400 கம்பெனிகளை சேர்ந்த (3.40 லட்சம்) மத்திய ஆயுதக் காவல் படைகளை (சிஏபிஎஃப்) கோரியுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இந்த முன்மொழிவு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.