மக்களவை தேர்தல் – ஜன28ல் ஆம் ஆத்மி பேரணி!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குறுதி என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதன்படி, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே களமிறங்கும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதையடுத்து, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் தனித்து தான் போயிடுகிறோம் எனவும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார்.
மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா நிதிஷ்குமார்? வெளியான பரபரப்பு தகவல்!
ஒரே நாளில், மேற்கு வங்கம், பஞ்சாப் மாநில முதல்வர்களிடமிருந்து இத்தகைய அறிவிப்புகள் வெளிவந்திருப்பது, இந்தியா கூட்டணிக்கு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் ஜனவரி 28ம் தேதி பேரணியை நடத்தவுள்ளது. பத்லவ் மகாசபா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இதனிடையே, ஹரியானாவிலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது.