மக்களவை தேர்தல் அதிரடிகள்… பணப்பட்டுவாடா… 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை.!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர், இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று, அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில், தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது.
இன்று காலை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இரண்டு நாள் ஆலோசனைக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் ஜனநாயக திருவிழாவில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்.
Read More – ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்… மத்திய அரசு அறிவிப்பு!
தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை அளிப்பது தொடர்பாக சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், மத்திய பாதுகாப்பு வீரர்களை நிறுத்தவும் கோரிக்கைகள் வந்துள்ளது.
ஜனநாயக முறையில், வெளிப்படையாக மற்றும் சுதந்திரமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கூறியுள்ளனர். தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். ஒவ்வொரு புகாரின் மீதும் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியின் வேட்பாளர் விவரங்களை கே.ஒய்.சி செயலி மூலம் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர், பொய் செய்தி, வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.