அதிகரிக்கும் கொரோனா.. பீகாரில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பரவலுக்கு ஏற்ப, சில மாநிலங்களில் ஊரடங்கை நீடித்தும் வருகின்றனர்.
அந்தவகையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், நேற்று ஊரடங்கை நீடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தின்போது, பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தெரிவித்தது.
மேலும், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, ரயில் மற்றும் விமான சேவைகள் தொடரும் எனவும், இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.