காஷ்மீரில் வாபஸ் பெறப்பட்ட வேட்பாளர் பட்டியல்… போராட்டத்தில் குதித்த பாஜகவினர்.!
டெல்லி : ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் என ஒரு லிஸ்டை இன்று காலை வெளியிட்ட பாஜக, அதனை சில நிமிடங்களில் திரும்ப பெற்றது.
அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்து. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 2014க்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரதானக் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முழுவீச்சில் ஆரம்பித்துள்ளன. மத்தியில் ஆளும் பாஜக, ஜம்மு காஷ்மீரில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலில் இன்று காலை 44 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது. அதில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 15 வேட்பாளர்களும், 2ஆம் கட்டத்தில் 10 வேட்பாளர்களும், 3ஆம் கட்டத்தில் 19 வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர் என அறிவித்தனர்.
அதன் பின்னர், திடீரென இந்த லிஸ்டை பாஜக தலைமை வாபஸ் பெற்றது. பின்னர், 15 பேர் மட்டும் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மட்டுமே வெளியிட்டது. அடுத்தடுத்த கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை அடுத்தடுத்து வெளியிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமை முதலில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு காஷ்மீர் பகுதி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, வடக்கு காஷ்மீரில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக ஷியாம் லால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஷியாம் லால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர் என்றும், வடக்கு காஷ்மீரில் அவரை அவ்வளவாக மக்களுக்கு தெரியாது என்றும், அப்பகுதியில் மக்கள் மத்தியில் தெரிந்த முகமாக உள்ள ஓமி கஜூரியாவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அரவிக்காவிடில் பாஜகவில் இருந்து விலகிவிடுவோம் என்றும் பாஜகவினர் ஜம்மு காஷ்மீர் பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டப் வாக்காளர் பட்டியலில், சையத் வசாஹத், கஜய் சிங் ராணா மற்றும் ஜாவேத் அகமது காத்ரி, அனந்த்நாக், தோடா, சோபியான், சையத் ஷோகத் கயூர் ஆந்த்ராபி, அர்ஷித் பட், ரஃபீக் வானி, மற்றும் சுஷ்ரி ஷகுன் பரிஹார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.