மதுபான கொள்கை வழக்கு..! மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8ம் தேதி வரை நீட்டிப்பு..!
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 8ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
டெல்லியில் புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனுவும் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற காவல் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, ஏப்ரல் 29 வரை நீட்டிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் காலாவதியாகிய நிலையில், இன்று மணீஷ் சிசோடியா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் நிலையில், கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 8ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.