டெல்லி, ஐதராபாத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு!
டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹைதராபாத்திற்கு தெற்கே 156 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக என்.சி.எஸ் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. இதுபோன்று தலைநகர் டெல்லியில் இன்று காலை 6.42 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி மெட்ரோ சேவைகள் சிறிதளவு பாதித்ததாகவும், பயணிகள் சிக்கித் தவித்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லேசான நிலநடுக்கம் காரணமாக ஒரு நிலையான நடைமுறையை பின்பற்றி ரயில்கள் எச்சரிக்கையான வேகத்தில் இயக்கப்பட்டு பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டன. இப்போது சேவைகள் சாதாரணமாக இயங்குகின்றன என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று மாலை சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புக்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.