டெல்லியில் 100-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் கீழ் குறைந்து, 0.16 சதவீதமாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தலைநகர் டெல்லியில் மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாத இறுதியில் டெல்லியில் மட்டும் தினசரி குறைந்த மதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இதனை அடுத்து டெல்லியில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் குறைந்து வரும் நிலையில், தற்போது டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-க்கும் கீழாக குறைந்து 89 ஆக உள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 173 பேர் குணம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் நேற்று 11 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தற்போது டெல்லியில் 1,996 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், டெல்லியில் கொரோனா பாதிப்பு 0.16 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.