காங்.கட்சியின் முக்கிய பிரமுகர் கொடூரமாக சுட்டுக்கொலை – கனடா கேங் பொறுப்பா? – டிஜிபி சொன்ன முக்கிய தகவல்..!
பஞ்சாபி பாடகரும்,காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா மான்சா மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு மூஸ்வாலா மற்றும் 424 பேரின் பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மூஸ்வாலா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பஞ்சாபில் உள்ள தங்கள் கிராமமான மான்சாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது,அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூஸ் வாலாவை நோக்கி சரமாரியாகச் சுட்டதில்,சித்து மூஸ் வாலா மிக மோசமாகக் காயமடைந்தார்.இதனையடுத்து,அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு,காங்கிரஸ் கட்சியினர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.அதன்படி,கேங் வார் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக ,பஞ்சாப் டிஜிபி விகே பவ்ரா கூறுகையில்: “லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கும்பல் இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.ஏனெனில்,அந்தக் கும்பலைச் சேர்ந்த லக்கி என்பவர் கனடாவில் இருந்து இந்த கொலைக்குப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த விக்கி கொலை செய்யப்பட்ட நிலையில்,இந்த கொலையில் சித்து மூஸ் வாலாவின் மேலாளர் ஷகன்ப்ரீத்தின் பெயர் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால்,விக்கி கொலையில் சித்துவுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதன் அடிப்படையில் பிஷ்னோய் கும்பல் இந்த கொலையை செய்திருக்கக் கூடும்.மேலும்,சித்து கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்.விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே,சித்து மூஸ்வாலா 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மான்சாவிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.அவர் ஆம் ஆத்மி கட்சியின் டாக்டர் விஜய் சிங்லாவிடம் தோல்வியடைந்தார்.அதே சமயம்,28 வயது பாடகரான சித்து,துப்பாக்கி,கேங் கலாச்சாரம் ஆகியவற்றை புகழந்து பாடுவதாக ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.