சட்டங்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும் – மோடி
ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.
குஜராத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மிகவும் பழைமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும். அப்போது தான் ஏழ்மையில் இருப்பவர்களும் அதை புரிந்து கொள்வார்கள்.
காலாவதியான சட்டங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதை உணர்ந்ததால் தான் சமூகம் அதிலிருந்து விடுபட்டுள்ளது. நீதி வழங்குவதில் உள்ள தாமதம் மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்திய நீதித்துறையில், தொழில்நுட்பம் ஒரு அங்கமாக மாறியுள்ளது.