லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!
லட்டு விவகாரம் தொடர்பாக இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில், விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக, குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு முழுவதும் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திர அரசிடம் உள்ள விவரங்களை தருமாறு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா அறிக்கை கேட்டிருந்தார். அதைப்போல, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது FSSAI மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், லட்டு விவகாரத்தில் தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க திருமலை
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவுபோட்டுள்ளார்.
அத்துடன், திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சந்திரபாபு உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் அறிக்கை கேட்டு உத்தரவு போட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் தேவஸ்தானம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.