‘லாத்மர் ஹோலி’ – ஆண்களை குச்சியால் அடிக்கும் பெண்கள்…!
உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லாத்மர் ஹோலி’ எனப்படும் வித்தியாசமான ஒரு பாரம்பரிய கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இந்த பண்டிகையானது வரும் மார்ச் 29-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லாத்மர் ஹோலி’ எனப்படும் வித்தியாசமான ஒரு பாரம்பரிய கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
‘லாத்மர் ஹோலி’ என்பது, கிருஷ்ணன் ராதா கதையை மையமாகக் கொண்டது. அதாவது மதுரா அருகே அமைந்துள்ள நந்தாகோன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ராதையின் சொந்த ஊரான பர்சனாவிற்கு வருகிறார். அங்கு ராதையும் அவரின் தோழர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து, அங்கு வரும் கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ராதை மற்றும் தோழிகளை வம்புக்கு இழுக்கிறார். இதனால் ராதை மற்றும் அவரது தோழிகள் கிருஷ்ணர் மற்றும் அவரது தோழர்களை பொய்யாக கோபம் கொண்டு குச்சியால் அடித்து விரட்டுகிறார். இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ‘லாத்மர் ஹோலி’ என்ற கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ராதை கோவில் அருகே ராதை போன்று வேடமிட்டு பெண்கள் கையில் தடியுடன், கோபியரை போல வேடமிட்டு ஆண்களும் திரண்டு வந்தனர். பெண்கள் குச்சிகளால் ஆண்களை பொய்யாக தாக்குகின்றனர். பெண்களின் தாக்குதல் தங்கள் மீது படாதவாறு ஆண்கள் பின்வாங்குகின்றனர். பின்னர் வண்ணங்களை பூசி ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இவ்வாறு பெண்கள் ஆண்களைத் தாக்கும் போது ஆண்களின் மீது அடி படும் பட்சத்தில், அவர்களை பெண்களின் ஆடைகளை கொடுத்து, வீதியில் ஆட வைக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தை காண்பதற்காக பல சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர்.