உத்தரகாண்டில் நிலச்சரிவு: 4 மாத குழந்தை உட்பட 4 பேர் பலி!
கடந்த சில மாதங்களாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாமல் பெய்து வரும் மழை காரணமாக உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள சம்பா என்ற இடத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் 4 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த பகுதியில் இருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மற்றொரு நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி நவ்நீத் சிங் புல்லரைட் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும்,ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும், சம்பா மற்றும் மண்டி மாவட்டங்களின் வெள்ள அபாயம் இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.