கர்நாடகாவில் நிலச்சரிவு …ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
கர்நாடகா : உத்திர கன்னடாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66 (National Highway 66) ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரமாக தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்து வந்த காரணத்தால் நிலச்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அடியில் சிக்கியிருக்கலாம் என்ற பயத்தில் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு 7 உடல்களை கண்டெடுத்தனர்.
இந்த நிலச்சரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் காரில் சென்று கொண்டு இருந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு விழுந்ததில் அவர்கள் இறந்தனர். இந்த நிலச்சரிவில் ஒரு தேநீர் கடையும் சரிந்து விழுந்தது.
இரண்டு எரிவாயு டேங்கர் வண்டிகளின் டிரைவர்கள் தேநீர் இடைவெளிக்கு நின்றிருந்தபோது மண் மற்றும் கற்கள் தொடர்ந்து கீழே விழுந்த காரணத்தால் அங்கு தேநீர் குடிக்க வந்த அவர்கள் 2 பேரும் நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த 2 எரிவாயு டேங்கர்கள் டேங்கர் வண்டிகள் சாலையின் மறுபுறத்தில் ஓடும் கங்காவலி நதிக்குள் அடித்து செல்லப்பட்ட நிலையில், எரிவாயு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், 12 கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உத்திர கன்னடா கலெக்டர் நிலைமையை நேரில் சென்று மதிப்பீடு செய்து வருகின்றார். மேலும், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறுகையில், கடுமையான மழை காரணமாக நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்” என கூறினார்.