லக்கிம்பூர் கெரி வன்முறை : விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் நியமனம்!
லக்கிம்பூர் கெரி வன்முறை விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அவர்களின் மகன் உட்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்துள்ளது.