மத்திய அரசு விளக்கம் !பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு …
மத்திய அரசு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ராணுவத்தின் பொறியியல், கல்விப் பிரிவுகளில் ஆள்சேர்ப்பதில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ராணுவம் சார்பில் வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்யக் கோரினார்.
1992ஆம் ஆண்டில் இருந்து பெண் அதிகாரிகளை ராணுவத்துக்குத் தேர்ந்தெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர், ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
அந்தப் பிரிவுக்கான தகுதியிலேயே மணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு குறிப்பிட்டிருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ உரிமைக்கு எதிரானது என அறிவிக்கவும் கோரினார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.