சீனா மோதல்களுக்கு மத்தியில்.. லடாக் டூ தர்ச்சா புதிய சாலை.!
லடாக்கை சாலை வழியாக இணைக்க மூன்றாவது பாதை அவசரமாக தேவை என கூறியதால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்ச்சாவிலிருந்து நிமு வரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிமுவானது லே நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. லே ஏற்கனவே இரண்டு வழிகளால் இணைக்கப்பட்டுள்ளது.
மணாலி-லே மற்றும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலைக்குப் பிறகு லடாக் செல்லும் மூன்றாவது பாதை இதுவாகும். 290 கி.மீ நீளமுள்ள இந்த சாலை லடாக் பிராந்தியத்தின் எல்லை தளங்களுக்குள் வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை நகர்த்துவதற்கு இந்த சாலை பயன்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்திலிருந்து லடாக்கிற்கு மாற்றுச் சாலையை உருவாக்கும் பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன. இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லை மோதலுக்கு மத்தியிலும் புதிய சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா பெருக்கி வருகிறது.
இது சீன ராணுவத்திற்கு பதில் நடவடிக்கை அல்ல எனவும் மக்களின் தேவைகளுக்காக என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. லடாக் நிலவரம் குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். மேலும், முப்படை தலைவர் மற்றும் தளபதிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.