ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு… அசாமில் வழக்குப்பதிவு! அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!

rahul gandhi

நாடாளுமன்றத் தேர்தல்ளுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரசை மேலும் பலப்படுத்த இந்திய ஒற்றுமை நடைப்பயணமான பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2வது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி, தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்தவகையில், அசாமில் படத்ராவா சத்ராவில் சாமி தரிசனம் செய்ய ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், யாத்திரையில் பங்குபெற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுபோன்று, அசாமில் ராகுல் காந்திக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், நேற்று அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  கவுகாத்தி எல்லையான கானாபுராவில் அசாம் மாநில போலீஸ் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டு, ராகுல் காந்தியின் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

அசாமில் ராகுல் யாத்திரை தடுக்கப்பட்டதால் பதற்றம்!

அதுவும், ராகுல் காந்தி கண் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டியே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அசாமில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், கன்னையா குமார் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அசாம் காவல்துறை தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து பாஜக தொண்டர்கள் நெருங்க அனுமதிக்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபியும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும், ஏதும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்