மணிப்பூர் வன்முறை.. பாஜகவுக்கான ஆதரவை திரும்ப பெறுகிறோம்.! குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு.!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம், அம்மாநில உயர்நீதிமன்றமானது, மைத்தேயி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பழங்குடியினர் குக்கி இனத்தை சேர்த்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொடங்கிய இரு பிரிவினர்கள் வன்முறையானது மணிப்பூர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.
அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் பொறுப்பில் இருக்கிறார். 60 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கொண்டுள்ளது. மேலும், ஐந்து NPF எம்எல்ஏக்கள் ஆதரவும், மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியான NDA கூட்டணிக்கு வழங்கி வருகின்றன.
அதே போல, 2 குக்கி மக்கள் கூட்டணி சார்பாக 2 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. தற்போது அந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக குக்கி மக்கள் கூட்டணி தலைவர் டொங்மங் ஹாகிப் ( Tongmang Haokip) ஆளுநர் அனுசுயா உய்கேவுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மே மாதம் துவங்கிய மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 160கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. மணிப்பூரில் உள்ள தற்போதைய பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கான தொடர்ச்சியான ஆதரவு அளிப்பது பயனற்றதாக உள்ளது. இதனால் குக்கி இன மக்கள் கூட்டணி சார்பாக நாங்கள் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுகிறோம் என அறிவித்துள்ளார்.
அதன்படி, குக்கி மக்கள் கூட்டணியில் உள்ள சைகுல் தொகுதி எம்எல்ஏ கிம்னியோ ஹாக்கிப் ஹாங்ஷிங் மற்றும் சிங்காட் எம்எல்ஏ சின்லுந்தாங் ஆகியோர் பாஜகவுக்கு தா0ங்கள் வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக NPP யின் 7 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 எம்எல்ஏக்களும், JD(U) கட்சி சார்பில் 6 எம்எல்ஏக்களும் உள்ளனர்.