கொல்கத்தா : தொடரும் மருத்துவர்கள் போராட்டம்., சிபிஐ விசாரணை தீவிரம்.!
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் இன்று கல்லூரி முதல்வரிடம் 7வது நாளாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. நீதிமன்ற கோரிக்கையை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது.
கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். முதலில் மேற்கு வங்க போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது.
உண்மைக் கண்டறியும் சோதனை :
சிபிஐ இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. முன்னதாக, ஆர்.ஜி கர் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷியிடம் சிபிஐ விசாரணை குழுவினர் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கல்லூரி முதல்வரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சிபிஐ , சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்படவே, இன்று 7வது நாள் விசாரணையில் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷியிடம் உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ மேற்கொள்ள உள்ளது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி :
முன்னதாக, இந்த வழக்கு குறித்து தமாக முன்வந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில், மாநில அரசின் நடவடிக்கையும், மாநில காவல் துறை விசாரணையையும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். முதல் தகவல் அறிக்கை தாமதமாக பதியப்பட்டது, போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது தடியடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.
போராட்டங்கள் நீட்டிப்பு – வாபஸ் :
மேலும், இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, நீதிக் கேட்டு நாடு முழுவதும் போராடும் மருத்துவர்கள், பொதுமக்களின் சுகாதார நலன் கருதி உடனடியாகப் பணிக்கு திரும்ப நீதிமன்றம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று இதுவரை, டெல்லி, ஜார்கண்ட், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை வாபஸ்பெற்றனர். உச்சநீதிமன்ற கோரிக்கையை ஏற்று மற்ற மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெற்றாலும், சம்பவம் நிகழ்ந்த ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை 15வது நாளாக தொடர்கின்றனர்.
கடுமையான சட்டங்கள் :
உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களை அடுத்து, மேற்கு வங்க அரசு பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, பாலியல் குற்றவாளிகள் மீதான குற்றங்கள், 15 நாட்களுக்குள் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு உடனடியாக நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.