“மம்தா ராஜினாமா செய்யனும்.” கொல்கத்தாவில் பேரணிக்கு தயாரான மாணவர்கள்.!
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டுமென மாணவர் அமைப்பினர் இன்று தலைமை செயலகம் நோக்கிப் பேரணி நடத்த உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு மாநில அரசு சார்பில் பொறுப்பேற்று முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் அமைப்பினர் (பதிவு செய்யப்படாத அமைப்பு) இன்று மதியம் 1 மணியளவில் மேற்கு வங்க தலைமை செயலகமான நபன்னா நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்தி சில அமைப்புகள் மாநிலத்தில் வன்முறையை தூண்டுவதற்காக சதித்திட்டம் தீட்டியுள்ளது என மேற்கு வங்க மாநில உளவுத்துறை, அம்மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தலைமை செயலகத்தை நோக்கி மாணவர் அமைப்பினர் நடத்த உள்ள பேரணிக்கு காவல்த்துறை அனுமதி மறுத்தது.
இருந்தாலும், குறிப்பிட்ட தேதியில் பேரணி நடைபெறும் என மாணவர் அமைப்பினர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு கொல்கத்தா முழுவதும் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தலைமை செயலகத்தை நோக்கியுள்ள பாதைகளில் 19 முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று (திங்கள்கிழமை) மாலை, முதலே ஹவுராவில் உள்ள நபன்னா (தலைமை செயலகம்) அருகே பொதுமக்கள் கூடுவதை போலீசார் தடுத்து நிறுத்தி அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல், கொல்கத்தா காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் தலைமை செயலகம் நோக்கி முன்னேறுவதை தடுக்கும் வகையில், தண்ணீர் பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளது. இந்த பேரணி தடுப்பு நடவடிக்கைகள், மற்ற விவகாரங்களை கண்காணிக்க 26 மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா காவல்துறைக்கு உதவியாக, துணை ராணுவத்தினர், ஹெவி ரேடியோ பறக்கும் படைகள் (HRFS), விரைவு அதிரடிப் படை (RAF), விரைவு எதிர்வினை குழுக்கள் (QRT) ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.