“உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள்.” பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு வந்த ‘திக் திக்’ அழைப்புகள்…
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் நிகழ்ந்தது குறித்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் ஓர் கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற இந்த கொடூர நிகழ்வில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இந்த வழக்கில் இதுவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து, இந்த விசாரணை வளையத்தில் இருப்பவர், அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ். இருவரிடமும் நீதிமன்ற அனுமதி பெற்று உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ விசாரணை குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சிபிஐ இன்னும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே , பயிற்சி மருத்துவரின் உடற்கூறாய்வு பற்றிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது, பயிற்சி மருத்துவரின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் செய்த போன் கால்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போன் கால்கள் பெண் மருத்துவர் உயிரிழந்த அடுத்த நாள் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது.
அதில், பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து செய்த போன் கால் அழைப்பில், பெண்ணின் தந்தை பேசுவது போல உள்ளதாக கூறப்பட்டுள்ளது . அதில், ” அவளுக்கு உடம்பு சரியில்லை. நாங்கள் அவளை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளோம் சீக்கிரம் வாருங்கள்” என பெண் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
தந்தை , “அவளுக்கு என்னவாயிற்று,” என கேட்கிறார். அதற்கு அந்த பெண் ஊழியர், “உண்மையில் அவளுக்கு உடம்பு சரியில்லை. சீக்கிரம் வாருங்கள்.” என கூறுகிறார். பெண் தந்தை பேசுகையில், ” அவளுக்கு காய்ச்சல் அடிக்கிறதா.?” என கேட்கிறார் .
அப்போது அந்த பெண் ஊழியர், ” நான் மருத்துவர் அல்ல. இங்கே பணிபுரியும் ஊழியர். நீங்கள் வாருங்கள் மருத்துவர்கள் விரிவாக சொல்வார்கள். அவள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருக்கிறார்” என்று கூறுகிறார். பின்னர் தந்தை மேலும் கேள்விகள் கேட்கவே, பின்னர் அந்த ஊழியர் , “எங்களால் ஒன்றும் சொல்ல முடியவிலை. உங்கள் பெண் தற்கொலை செய்து கொண்டு இறந்து இறக்கலாம்.” என கூறுகிறார். இப்படியாக அரை மணிநேரத்தில் 3 போன் கால்கள் பயிற்சி மருத்துவரின் பெற்றோர்களுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
உடற்கூறாய்வில் குறிப்பிட்ட தகவலின்படி, பயிற்சி மருத்துவரின் தலை, முகம், கழுத்து, தோள்பட்டை, பிறப்புறுப்பு என 14 இடங்களில் காயங்கள் இருந்தன என்றும், பெண்ணின் பிறப்புறுப்பில் 150 மி.லி அளவுக்கு விந்தணு இருந்தது என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.