பயிற்சி மருத்துவர் கொலையில் “என் மகன் மட்டுமே காரணமல்ல..” சஞ்சய் ராய் தாயார் பரபரப்பு பேட்டி.!
கொல்கத்தா : என் மகன் மட்டுமே இந்தக் குற்றத்திற்கு காரணமானவன் அல்ல. இதற்கு பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதாகி இருந்த சஞ்சய் ராயின் தாயார் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள, பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைதாகி உள்ளார். குற்றம் நிகழ்ந்தகாக கூறப்படும் நேரத்தில் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சஞ்சய் ராய் இருந்தது சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது எனவும், அதனடிப்படையில் அவர் கைதாகியுள்ளார் என்றும் கூறப்டுகிறது.
சஞ்சாய் ராய் தவிர, கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இப்படியான சூழலில், பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய் ராயின் தாயார் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் தனது மகன் சஞ்சய் ராய் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
என கணவர் இறந்த பிறகு….
அவர் கூறுகையில், ” எனது மகன் பள்ளிக் காலகட்டத்தில் நன்றாகப் படிக்கும் மாணவன். பள்ளி என்சிசி பிரிவில் கூட பங்குபெற்றிருந்தான். அவரது தந்தை மிகவும் கண்டிப்பானவர். சஞ்சய் அவருக்கு கட்டுப்படுவான். என் கணவர் இறந்த பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நான் இன்னும் கண்டிப்புடன் இருந்திருந்தால், இது நடந்திருக்காது. என் அழகான குடும்பம் இப்போது ஒரு நினைவாக மட்டுமே உள்ளது.
மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?
சஞ்சய் தான் என்னை கவனித்துக் கொண்டான். அவன் எனக்கு சமைத்து கூட தருவான். நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட கேட்கலாம். அவன் யாரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. நான் அவனைச் சந்தித்தால், “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்பேன்.
அவனது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து, சஞ்சய் ராய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான். சஞ்சயின் மனைவி ஒரு நல்ல பெண். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திடீரென்று, சஞ்சய் மனைவிக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தது. சஞ்சய், தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு மன அழுத்தத்திற்கு உள்ளாகி குடிப்பழக்கத்திற்குச் அடிமையானான்.
ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியில் எனது மகன் குடிமைத் தன்னார்வத் தொண்டராக செயல்பட்டது எனக்குத் தெரியாது. இந்த சம்பவத்தைச் செய்ய அவனை யார் தூண்டினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அது யாராக இருந்தாலும், அந்த நபர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று சஞ்சய் ராயின் தாயார் தெரிவித்தார்.
சஞ்சய் ராய் மாமியார் :
சஞ்சய் ராய் பற்றி அவரது மனைவியின் தயார் கூறுகையில், ” சஞ்சய் ராய் செய்த குற்றத்திற்காக அவருக்கு “தூக்கு தண்டனை” வழங்கப்பட வேண்டும். என் மகளுடன் திருமணமான முதல் ஆறு மாதங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. எனது மகள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது, எனது மகளுக்கு கருச்சிதைவு நிகழ்ந்தது. சஞ்சய் எனது மகளைத் தாக்கினார். மேலும் இது தொடர்பாக காவல்துறையில் அப்போது புகார் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, என் மகள் புற்றுநோயால் அவதிப்பட்டாள்.” என்றும்,
“சஞ்சய் தற்போது நல்ல மனநிலையில் இல்லை. அவரை தூக்கிலிடுங்கள், அல்லது வேறு கடுமையான தண்டனை கொடுங்கள். அந்த குற்றத்தைப் பற்றி நான் பேசமாட்டேன். அந்த குற்றத்தை அவரால் மட்டும் செய்திருக்க முடியாது. அவரால் தனியாக செய்ய முடியாது ” என்று மாமியார் ANI செய்தி நிறுவனத்திடம் முன்னர் கூறியிருந்தார்.
தற்போதைய நிலை :
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைதாகியுள்ள சஞ்சய் ராய், கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்களை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும், சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை (பாலிகிராப்) நடத்த சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.
உண்மை கண்டறியும் சோதனை மூலம் சஞ்சய் ராயிடம் வாக்குமூலம் பெற்றாலும் அதனை ஓர் ஆதாரமாக சிபிஐ விசாரணை குழு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. அதற்கு பதிலாக, அந்த வாக்கு மூலத்தை கொண்டு ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.