கொல்கத்தா தீ விபத்து…! உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்…! – மம்தா பானர்ஜி
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் மையப்பகுதியான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில், இந்த கட்டடத்தின் 13வது மாடியில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மற்ற கட்டடங்களுக்கு பரவிய நிலையில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது லிஃப்டில் 4 வீரர்கள் சென்ற நிலையில், மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கிய 4 பேர் இறந்துள்ளனர். இது தவிர 5 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது மிகவும் வருத்தத்திற்குரியது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.