Categories: இந்தியா

“நீதி வேண்டும்.. நீதி வேண்டும்”.. நாடு முழுவதும் வலு பெரும் மருத்துவர்கள் போராட்டம்.!

Published by
மணிகண்டன்

கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உண்மை குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனை கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய தன்னார்வலர் ஒருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என  கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கினை சிபிஐ தலையிட்டு விசாரிக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை :

பெண் பயிற்சி மருத்துவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை அடுத்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியே “குற்றவாளிகளுக்கு மரண தண்டனை” வழங்க வேண்டும் எனக் கூறும் அளவுக்குக் கண்டனங்கள் வலுப்பெற்றன.

பயிற்சி மருத்துவர் படுகொலையைக் கண்டித்து முன்னதாகவே டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருத்துவர்கள்,  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் மௌலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணியை நடத்தினார்.

கண்டன பேரணியில் மம்தா :

இந்த கண்டனப் பேரணியில் மம்தா பேசுகையில், ” பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் உண்மை வெளிவர வேண்டும். ஆனால் சில தரப்பினர் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகப் பொய் தகவல்களைப் பரப்புகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி உண்மையை மறைக்க முயற்சி நடைபெறுகிறது. உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ” எனக் கூறினார்.

மருத்துவ சங்கம் அறிவிப்பு :

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிட வேண்டும் என்றும்,  நாடு முழுவதும் பெண் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்திட அரசை வலியுறுத்தியும், அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றது. இதற்கான அறிவிப்பை நேற்று இரவு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.

அதில்,  கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடைபெற்ற கொடூர குற்றத்திற்கும், அதற்கு எதிராக சுதந்திர தினத்தன்று போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டித்தும் இன்று (ஆகஸ்ட் 17) நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், இன்று அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் செயல்படும் என்றும், மற்ற பொது மருத்துவம், இன்று குறிப்பிடப்பட்டு இருந்த அறுவை சிகிச்சைகள் ஆகியவை நடைபெறாது. பொதுமக்கள் இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போராட்டம் :

மேற்கு வங்கம், டெல்லி, குஜராத் ,  தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவர்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ராஜிவ் காந்தி மருத்துவமனை, சென்னை மருத்துவமனை கல்லூரி ஆகியவை ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து, சென்னை மருத்துவக் கல்லூரி முதுகலை பயிற்சி மருத்துவர் டாக்டர் நவநீத் கிருஷ்ணன் கூறுகையில், ​​”மருத்துவர்களாகிய நாங்கள் இன்று வெளியே வரவில்லை. எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் எனப் பொதுமக்களை தயவு கூர்ந்து நாங்கள் கேட்டு கொள்கிறோம். மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. மருத்துவர்களின் போராட்டத்தை அடுத்துத்தான், இந்த பிரச்சினை அனைவரிடமும் சென்றடைந்தது. ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவர்கள் சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட  வேறு வழியின்றி வெளியே வந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்” என ANI செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய அரசு நடவடிக்கை :

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை, நாடு முழுவதுமாக மருத்துவர்கள் போராட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ,  நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது ஏதேனும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தால், சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய வேண்டும். அதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய சம்பவங்கள்…

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் ஒரு  கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டார். அதன் பிறகு சில நாட்கள் சிகிச்சையிலிருந்த நிர்பயா பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 7 வருடங்கள் வழக்கு நடைபெற்றது. வழக்கு நடைபெற்ற காலத்தில் ஒருவர் உயிரிழக்க,  சம்பவத்தன்று 17 வயதேயான ஒருவன் சிறார் சிறையில் 3 ஆண்டுகள் (அதிகபட்ச சிறார் தண்டனை) அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள 4 பேருக்கும் மார்ச் 2020இல் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் , கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பின்னர் சடலம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.  இந்த குற்றத்தில் குற்றவாளிகள் என அறியப்பட்ட 4 பேரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இது போல, புதுச்சேரி சிறுமி, ஆசிபா படுகொலை என பெண்களுக்கு எதிராகவும், பெண் பிள்ளைகளுக்கு எதிராகவும் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. இந்தியத் தண்டனை சட்டம் கடுமையாக மாற வேண்டுமா.? அல்லது உடனடி தீர்வாக மக்கள் மத்தியில் கருதப்படும் என்கவுண்டர்கள் அதிகளவில் ஆதரிக்கப்பட வேண்டுமா என்பது சாமானியர்கள் மனதில் எழும் பெரும் கேள்வியாக உள்ளது.

இந்திய தண்டனை சட்டம் :

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான இந்தியத் தண்டனைச் சட்டம்  376இன் படி 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் இந்தியத் தண்டனை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகள் ,  காவல் துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீதான தண்டனை கடுமையாக இருக்கும் எனும் சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

31 minutes ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

51 minutes ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

1 hour ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

9 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

12 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

14 hours ago