கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் முதற்கட்டமாக அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து, இந்தவழக்கு கோல்கட்டாவில் செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், குற்றவாளி யார் என்கிற அறிவிப்பும் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் தான் குற்றவாளி எனவும், குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் என்னென்ன? என்பது பற்றி விவரம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில், தற்போது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கொல்கத்தா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கொலைசெய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.