கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை : “பளார்” வாங்கிய சந்தீப் கோஷ்.!
நேற்று கொல்கத்தா நீதிமன்றதிற்கு சந்தீப் கோஷை சிபிஐ விசாரணை குழுவினர் அழைத்து வருகையில் பொதுமக்கள் அவரை தாக்க முற்பட்டனர்.
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுவரையில் மேற்கொண்ட விசாரணையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் குற்றவாளியாக சிபிஐ உறுதி செய்யவில்லை. அடுத்ததாக இந்த வழக்கில் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.
பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விசாரணை வளையத்தில் உள்ள சந்தீப் கோஷ், ஆர்.ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத உடல்கள், மருத்துவ கழிவுகளை கடத்திய புகாரில் சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யபட்டார். அந்த வழக்கு தொடர்பாக நேற்று கொல்கத்தா நீதிமன்றத்திற்கு சந்தீப் கோஷ் அழைத்து வரப்பட்டார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சந்தீப் கோஷை 12 சிபிஐ அதிகாரிகள், 25 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர். அப்போது இருந்தே போராட்டகாரர்கள் நீதிமன்ற வளாகத்தில், பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்தும், சந்தீப் கோஷிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் பலரும் சந்தீப்பை தாக்க முற்பட்டனர். சிபிஐ அதிகாரிகள் சந்தீப்பை சூழ்ந்து பாதுகாப்பாக நீதிமன்றத்துக்குள் அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் சந்தீப் கோஷிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தாக்க முற்பட்டனர். அப்போது சந்தீப் கோஷ் மீது ஓர் பளாரென்று ஓர் “அறை” விழுந்ததாக கூறப்படுகிறது. பிறகு எப்படியோ நீதிபதி முன்னர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கொண்டு நிறுத்தினர். பின்னர் அதே போல பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து சந்தீப்பை வெளியே அழைத்து வந்தனர்.
அப்போதும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போராட்டகாரர்கள் சந்தீப் கோஷை தாக்க முற்பட்ட்டனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் சந்தீப்பை சூழ்ந்து பாதுகாத்தனர். சந்தீப் கோஷை செப்டம்பர் 10 வரையில் 8 நாட்கள் சிபிஐ விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.