பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை எதிரொலி : சந்தீப் கோஷை சஸ்பெண்ட் செய்த மருத்துவர் சங்கம்.!
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இந்திய மருத்துவர்கள் சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கொல்கத்தாவில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பதால் போராட்டங்கள் இன்னும் வலுப்பெற்று வருகின்றன.
இந்த கொலை வழக்கில் தன்னார்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். அதே போல ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடமும் சிபிஐ விசாரணை குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்தீப் கோஷ் மீது, மருத்துவ கல்லூரியில் அடையாளம் கண்ப்படாத உடல்களை சட்டவிரோதமாக விற்றது உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளன.
சந்தீப் கோஷ் மீதான இந்த குற்றசாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு சந்தீப் கோஷ் மீது அடுத்தடுத்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய மருத்துவர் சங்கம் அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சந்தீப் கோஷை, இந்திய மருத்துவர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்து சங்க ஒழுங்காற்று குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தீப் கோஷ், இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் கொல்கத்தா கிளை துணைத் தலைவராக பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.