கொல்கத்தா மருத்துவர் படுகொலை ! காவல்துறை பணம் கொடுக்க முயன்றதாக பெற்றோர் குற்றச்சாட்டு!
கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென நேற்றிரவு சக மருத்துவர்கள் விளக்கை அணைத்து விட்டு தீப்பந்தம், மெழுகுதிரிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தா : பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், காவல்துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சஞ்சய் ராய் எனும் ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாட்கள் அதாவது செப்டம்பர் 10 வரையில் சிபிஐ விசாரணை காவலில் எடுத்து விசாரிக்கக் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More : கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை : “பளார்” வாங்கிய சந்தீப் கோஷ்.!
இதனால், நேற்று (புதன்கிழமை) நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சந்தீப் கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேலும், சிபிஐ விசாரணையை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வரும் செப். 6-ஆம் தேதி அதாவது நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.அந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் ஈடுபட்டனர்.
அப்போது, கொல்கத்தா காவல் துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார்கள் என கடும் குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை முன்வைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண் மருத்துவரின் தந்தை, “இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே காவல்துறையினர் மூடிமறைக்கவும், அவசரமாக முடிப்பதிலுமே தீவிரம் காட்டி வந்தனர்.
மேலும், பிரேதப் பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போதும் எங்களை உடலைப் பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை. பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகும் உடலை எங்களிடம் ஒப்படைத்த போது மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார்.
நாங்கள் அதனை வாங்காமல் மறுத்து விட்டோம். மேலும், எங்கள் மகள் உடலை எரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால், அவசரமாக உடலை எரித்துவிட்டனர்.
இது போல் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? எங்களது மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர்களின் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். போராட்டம் நடத்தும் அனைத்து மருத்துவர்களும் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்”, என அப்பெண் மருத்துவரின் தந்தை கூறியிருந்தார்.