அமெரிக்காவில் ஐ.டி வேலையை உதறிவிட்டு,மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டும் தன்னம்பிக்கை இளைஞர்..!
கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு,மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி வருகிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர் இந்துகுரி என்ற இளைஞர்,கரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு,பி.ஹெச்.டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.அதன் பிறகு,படிப்பை நிறைவு செய்த கிஷோர்,உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள் ஒன்றான Intel லில் பணிக்கு சேர்ந்து மாதம் அதிக ஊதியம் வாங்கி வந்தார்.எனினும்,கிஷோரால் அந்த வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை.
இதனையடுத்து,6 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய கிஷோர், சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஹைதராபாத்தில் தரமான பாலுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருப்பதை அறிந்து கொள்கிறார்.இதனால்,பசு மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, 20 பசு மாடுகளை வாங்கிய கிஷோர்,தனது குடும்பத்தினர் உதவியுடன் வீடுகளுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும்,கையில் இருந்த ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியுளார்.
இதனையடுத்து,2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள ஆறாயிரம் குடும்பங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யும் அளவுக்கு கிஷோரின் பண்ணை வளர்ந்திருந்தது.அதன்பின்னர்,மகன் சித்துவின் பெயரையே பண்ணைக்கும் சூட்டி,’சித்து பார்ம்’ என மாற்றினார்.
தற்போது இயங்கி வரும் சித்து மாட்டு பண்ணையில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதுடன்,தினசரி வாடிக்கையாளர் எண்ணிக்கை மேற்கொண்டு 10 ஆயிரமாக உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து கிஷோர் கூறுகையில்,”2012 ஆம் ஆண்டில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு, 20 பசு மாடுகளுடன் பால் பண்ணையை ஆரம்பித்தேன். ஆனால்,தொடக்கத்தில் பலவிதமான கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.குறிப்பாக,தினசரி பால் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகப்பெரிய சவாலாக இருந்தது.அதனால்,பால் கெடாமல் இருக்க விலையுயர்ந்த மெஷின்களை வாங்க வேண்டியிருந்ததால்,கையில் இருந்த மொத்த பணத்தையும் முதலீடு செய்து அந்த மெஷின்களை வாங்கினோம்.
அதுமட்டுமல்லாமல்,குடும்ப உறுப்பினர்களும் தொழிலுக்கு உதவியாக இருந்தனர்.மேலும்,2018 ஆம் ஆண்டில் வங்கியில் 1.3 கோடி ரூபாய் லோன் பெற்று பண்ணையை விரிவு செய்தேன்.இருப்பினும்,தொடர்ந்து தொழிலை மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தற்போது வரை செய்து வருகிறேன்”,எனக் கூறினார்.
இதன்மூலம்,பிடித்த தொழில் செய்தால் அதில் வெற்றி பெற முடியும் என்று கிஷோர் நிரூபித்து,மற்ற இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.