பாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணம் தீய சக்தி-பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர்
பாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணம் தீய சக்தி என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரக்யாசிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
11 ஆண்டுகளாக இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது பிரக்யா சிங் தாகூர் பாஜக எம்.பி.யாக உள்ளார்.இவர் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் வாஜ்பாய் , மனோகர் பரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் மரணம் குறித்து பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக போபாலில் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில் மகாராஜ்ஜி என்னிடம் கூறுகையில்,உங்கள் கட்சிக்கு மிகவும் மோசமான நேரம் ஆகும்.எதிர்க் கட்சிகள் உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக தீய சக்திகளை பயன்படுத்துகின்றது .எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் அதற்கு பிறகு அதை மறந்து விட்டேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறியது உண்மை என்றே தெரிகிறது.
கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்ற நிலையில் அவர் சொன்னதை இப்போது நினைத்து பார்த்தேன்.இது உண்மையாகத்தான் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.