பரபரப்பு!! ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் படுகாயம்!
இஸ்ரேலில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர், இந்தியாவில் வசிக்கும் தனது கணவருடன் வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும்பொழுது, பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையாவூரைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த், ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஷீஜாவின் கணவரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் இந்தியாவில் உள்ளனர், கணவர் புனேவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஷீஜா ஆனந்தின் கணவர் நலம் விசாரிக்க வீடியோ கால் செய்திருக்கிறார். அப்பொழுது, பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே பலத்த சத்தம் கேட்டதுடன் ஷீஜாவின் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கேரளாவைச் சேர்ந்த சக ஊழியர் ஒருவர் ஷீஜாவின் குடும்பத்தினருக்கு அவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஷீஜா ஆனந்துக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தற்பொழுது, இஸ்ரேலில் இருக்கும் இந்தியத் தூதரக குழுவினர் ஷீஜாவின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு அவர் நலமுடன் இருப்பதாக ஆறுதல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் பணிபுரிந்து வருகிறார்கள். இதில், கொச்சியைச் சேர்ந்த 45 பேர் பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் இப்பொது பாதுகாப்பாக இருப்பதாகவும், எல்லையை கடக்க அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.