கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரிப்பு!
வயநாடு நிலச்சரிவு : தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இன்று காலை வரை 150-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், அதனை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளது. இதில், உயிரிழந்த 89 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீட்புப்பணி தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பணியில் விமானப் படை ஹெலிகாப்டா்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இதனைத் தொடர்ந்து, பணமாக கொடுக்க விரும்புபவர்கள், கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலும், பொருள்களாக கொடுக்க விரும்புபவர்கள் 1077 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.