யார் இந்த டொமினிக் மார்ட்டின்? தீவிர விசாரணையில் கேரள போலீஸ்! முழு விவரம்…

Dominic Martin

கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது.

குண்டுவெடிப்பு

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்துள்ளார். வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த பின், ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG , NIA  விசாரணை நடத்த உத்தரவிட்டார் அமித்ஷா.

குண்டு வைத்தது நான் தான்

இந்த சம்பவம் தொடர்பாக, ‘வெடிகுண்டு வைத்தது நான் தான்’ என்று கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர், திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், குண்டு வெடிப்பு நடந்த ஜெஹோவா விட்னெசெஸ் சபையின் உறுப்பினராக இருந்தவர் எனவும் அம்மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த நபரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல்நிலையத்தில் சரணடைந்துள்ள டொமினிக் மார்ட்டின், போலீசாரிடம் சரணடைவதற்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

டிபன் பாக்ஸ் குண்டு

கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.40 மணியளவில் அந்த அடுத்தடுத்த வெடித்தது தெரியவந்துள்ளது என கேரள டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.

நீல நிற கார்

கிறிஸ்தவ கூட்டம் நடைபெற்ற மையத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு சற்று முன்னதாக, அங்கிருந்த புறப்பட்ட ஒரு நீல கார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் காரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், தொடர்ந்து அந்த காரை தேடும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு 

கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குண்டு வெடிப்பை பற்றி விரிவான விவரங்களை கேட்டறிந்து பின், நாளை காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

தீவிர விசாரணை

இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வறுகின்றனர்.

சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

இதற்கிடையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகாணி, எருமாடு, கனநல்லா உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பரபர

கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கேரளா எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்