கேரளா விமான விபத்து… விமானியின் பிழையே காரணம்..!
விமானத்தை தரை இறக்குவதற்கான “நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை” அதுவே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தீவிரமாக பரவி வந்த நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்தனர். இதனால், மத்திய அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பணிகள் மற்றும் 2 விமானிகள் உட்பட 6 பணியாளர்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர்.
இரவு 7.40 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்த இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில், விமானம் இரண்டாக உடைந்தது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள், ஒரு குழந்தை உட்பட 21 பேர் உயிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், ஒரு வருடம் கழித்து விமான விபத்து விசாரணை பணியகத்தின் 257 பக்க அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
அதில், விமானத்தை தரை இறக்குவதற்கான “நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை” அதுவே விமான விபத்த்திற்கு காரணமாக அமைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ‘கோ அரோவுண்ட்’ என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விமானி பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளது. ‘கோ அரோவுண்ட்’ என்பது விமானம் தரையிறங்கும் நேரத்தில் தரையிறங்காமல் வானில் ஒருமுறை வட்டமடித்துவிட்டு மீண்டும் தரையிறங்கும் முறையாகும்.