48 தமிழ் குடும்பங்களிடம் வாடகை கேட்ட கேரள வீட்டு உரிமையாளர்.! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.!
தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அமைப்பு சாரா தினக்கூலிகள், கட்டட வேலை செய்பவர்கள் என பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதனால், கேரளாவில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்திருந்தார். இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் கொள்வயலால் எனும் ஊரில் 48 தமிழ் குடும்பங்கள் குடியிருப்பு ஒன்றில் வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர்.
அவர்கள் மரம் வெட்டும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையின்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தவித்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் அவர்களிடம் குடியிருப்பு உரிமையாளர் வீட்டு வாடகை கேட்டு தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. மேலும், வீட்டு வாடகை கொடுக்காத ஒரு முதியவரின் வீட்டை பூட்டி அவரை வெளியேற்றியதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, காசர்கோடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்ததன் பேரில், அந்த குடியிருப்பில் இருந்த 48 தமிழ் குடும்பங்களிடமும் வாடகை வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.