வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் – கேரள ஆளுநர் மறுப்பு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களுக்கு குறித்து விவாதிக்க கேரள சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு இன்று கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 23 -ஆம் தேதி சிறப்பு அமர்வு நடத்த அவசரம் இல்லை என்று கேரள அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசு திட்டமிட்டிருந்தது.
இவ்வளவு குறுகிய காலத்தில் அமர்வைக் கூட்டுவதற்கான காரணங்கள் என்ன என்று அரசிடம் ஆளுநர் கேள்வி எழுப்பினார்.இதற்கு அரசு தரப்பில் காரணங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆளுநர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கேரள வேளாண் அமைச்சர் சுனில் குமார் கூறுகையில்,ஆளுநரின் நடவடிக்கை மிகவும் எதிர்பாராதது என்று கூறியுள்ளார்.வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் சட்டசபையின் சிறப்பு அமர்வுகளை கூட்டியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.