#தங்கக்கடத்தல்-மேலும் 3 பேர் கைது- என்ஐஏ அதிரடி
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தீவிரவாதிகளுக்கும் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவிற்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.
இதில் தங்கம் கடத்தும் முக்கிய நபர்களின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது என்று கடந்த சில ஆண்டுகளாகவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலான தங்கம் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தான் வழக்கை என்ஐஏ அதிகாரிகள் மிக தீவிரமாக விசாரித்து வருவதாகவும் மேலும் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து கைது செய்துள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரும் கேரள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டு வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக கேரள வட்டங்கள் தெரிவிக்கின்றன.