கேரளா பெண் மருத்துவர் கொலை..! மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்..!
கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது.
கேரளாவில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் நேற்று 23 வயதான பெண் மருத்துவர் ஒருவர், கைதி ஒருவரால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டாரக்கரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.
முன்னதாக, குடிபோதையில் வழக்கத்திற்கு மாறான முறையில் பேசி தன்னை சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறி பள்ளி ஆசிரியர் சந்தீப், போலீசாரைத் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, பூயப்பள்ளியில் ஒரு வீட்டின் அருகே அவரை போலீசார் கண்டுபிடித்தனர். அப்பொழுது அவர் குடி போதையில் இருந்துள்ளார். அவரது, ஒரு காலில் காயமும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்தீப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பரிசோதனையின் போது சாதாரணமாக நடந்து கொண்ட அவர், திடீரென அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளார். இதனால் ஒரு காவலர் காயமடைந்தார். இதனையடுத்து, அனைவரும் பரிசோதனை அறையை விட்டு வெளியேறிய நிலையில் வந்தனாவால் வெளிவர முடியவில்லை. பின்னர் சந்தீப் மருத்துவருக்கு எதிராக திரும்பி அவரை பலமுறை குத்தியுள்ளார்.
இதனால் பலத்தக் காயமடைந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த உடனேயே வந்தனாவுக்கு நீதி கோரி அரசு மருத்துவர்கள் அனைவரும் தங்களது பணியை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த கொலையை கண்டித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது அவசர சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர சட்டம் நிறைவேற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேரள முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#WATCH | Kerala: Doctors hold protest in front of secretariat in Thiruvananthapuram and demand justice for Dr Vandana Das, who was stabbed to death by her patient pic.twitter.com/a8c4Z5w5ao
— ANI (@ANI) May 11, 2023