79 ஆண்கள், 64 பெண்கள்.! இன்னும் 191 பேரை காணவில்லை.! கேரளா முதல்வர் தகவல்.!
வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள், இறப்பு விவரங்கள் ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில் , நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது வரலாறு காணாத மற்றும் வேதனையளிக்கும் பேரழிவு ஆகும். இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 79 பேர் ஆண்கள் மற்றும் 64 பேர் பெண்கள் ஆவார். இன்னும் 191 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் பகுதியில் இருந்து முடிந்தவரை பலரை வெளியேற்றவும், மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படை உதவி கோரப்பட்டுள்ளது. அட்டமலை, சூரல்மலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதையில்லாத இடங்களில் மீட்கப்படும் ஒவ்வொரு நபர்களையும் மீட்க ஒவ்வொருவராக வெளியில் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
LLH, M17 என இரு ஹெலிகாப்டர்கள்மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சூரல்மலையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடவியல் நிபுணர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனைகள் விரைவாக நடைபெறுகிறது. 17 லாரிகள் மூலம் தேவையான உதவிப்பொருட்கள் சூரல்மலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இதுவரை 5,500க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.