ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பிக்க கேரள முதல்வர் உதவி – ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு
கேரளா முதல்வர் விஜயன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பியோட உதவியதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு.
தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சாட்டிலைட் போன் மூலம் பிடிபட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒருவரை சட்டத்தில் இருந்து தப்பிக்க, முதல்வர் பினராயி விஜயன் உதவியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், எகிப்தில் பிறந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ஒருவரை கொச்சி விமான நிலையத்தில் கடந்த 2017 ஜூலை 4-ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சாட்டிலைட் போனுடன் கைது செய்து, பின்னர் நெடுவாசலில் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில், மூன்று நாட்களுக்குப் பிறகு, முதல்வர் அலுவலகம் தலையிட்டதாகவும், கைது செய்யப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அவர் கைது செய்யப்பட்ட நாளில், மாநிலத் தலைநகரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கு பேச அழைப்பு வந்தது. இதுபற்றி அவரது செயலாளர் எம்.சிவசங்கரை அழைத்து தெரிவித்தேன். இதன்பின், 10 நிமிடங்களுக்குப் பிறகு அவர் என்னை அழைத்தார். அவரை உடனடியாக விடுவிக்க உதவுவதற்கு ஒரு அதிகாரி உத்தரவாதம் செய்துள்ளார் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் ஜூன் 30 அன்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்ததாகவும், நான்கு நாட்கள் மாநிலத்தில் இருந்ததாகவும், திரும்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் சுரேஷ் தெரிவித்தார். முதல்வர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உதவினார். அவரது செயல்பாடுகளை விசாரிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
அவரை விடுதலை செய்ய முதல்வர் அலுவலகம் எப்படி அப்பட்டமாக தலையிட முடியும்? முதலமைச்சரின் மகள் வீணா விஜயன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் தொடங்குவதை உறுதி செய்வதற்காக இந்த சட்டவிரோத செயல்கள் செய்யப்பட்டன என்று கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் கேரளாவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது இயற்கையானது. ஆனால், இதுபோன்ற முக்கியமான வழக்கில் முதல்வர் எப்படி தலையிட முடியும்? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் மாநிலத்தில் அவரது செயல்பாடுகளை விசாரிக்காமல் விடுவிக்கப்பட்டார்.
முதல்வருடன் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பல சந்திப்புகளை மேற்கொண்டதாகவும், ஷார்ஜாவில் அவரது மகளின் தொழில் முயற்சியில் அவர் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் தெரிவித்தார். ஆரம்பத்தில், முதல்வர் என்னைத் தெரியாது என்று கூறினார். பின்னர் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் தனது வீட்டிற்கு வந்ததாக கூறினார். இப்போது அமைதியாக இருக்கிறார். என் மீது பல வழக்குகளைப் போட்டதற்காக அவர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார் என்று அவரிடம் கேளுங்கள்? வரும் நாட்களில் மேலும் பல விஷயங்களை வெளிப்படுத்துவேன் எனவும் கூறினார்.
தன்னை ஒரு “வெறும் பலிகடா” ஆக்கிவிட்டு மற்றவர்களை தப்பிக்க விடமாட்டேன் என்று சுரேஷ் கூறினார். மாநிலத் தலைநகரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தில் நடந்த அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியும் என்று ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தற்போது கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவரை விடுவிக்க முதல்வர் சதி செய்ததாகவும், அரசு தலையிட்டு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போனுடன் சிக்கிய நபரை விடுவித்தது என குற்றம் சாட்டி உள்ளார்.