ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளாவில் 20 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரேகட்டமாக விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
காலை 8 மணி நிலவரப்படி கேரளாவில் 6.30% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. கேரளாவில் மக்கள் காலை முதல் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், காலை 8 மணி அளவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை பதிவு செய்தார்.
கண்ணூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்த முதலவர் பினராயி விஜயன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான மக்கள் இயக்கம் இருப்பதாக தெரிகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு இது மிக முக்கியமான வாய்ப்பு என்பதை மக்கள் உணர்ந்து, பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கம் உருவாகி வருகிறது.
பாஜக பெரிய அளவில் பிரசாரம் செய்தாலும், பாஜகவால் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும் இரண்டாவது இடத்தைப் பெற முடியாது என்று கூறினார்.