மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதற்காக மத்திய பட்ஜெட்டை கேரள முதல்வர் கண்டித்துள்ளார்.
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் என பல அறிவிக்கப்பட்டது. ஆனால், தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.
தென் மாநிலங்கலான தமிழகமும் கேரளாவும் கடுமையாக தங்களது விமர்சனங்களை முன் வைத்துள்ளது. மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டை பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? என கேள்வி எழுப்பிய அவர், எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சி உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும் நிதி அறிவிக்கப்படும் என்றால், இது ‘மத்திய பட்ஜெட்’ தானா” என்று சாடியுள்ளார்.
அதே போல், தற்பொழுது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய பட்ஜெட் கேரள மாநிலத்தின் பல்வேறு துறைகளின் முக்கிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்துல, “2025ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை. மாநிலங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டாலும், கேரளாவுக்கு ரூ.40,000 கோடி கூட கிடைக்கவில்லை.
கல்வித் துறை உட்பட, கேரளா அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் அது தண்டிக்கப்படுகிறது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, எனவே அந்தப் பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. வரலாறு காணாத பேரழிவை சந்தித்த வயநாடு,மறுவாழ்வுக்காக ஒரு சிறப்பு தொகுப்பு கோரப்பட்டது. வயநாட்டிற்கு பட்ஜெட்டில் எதுவும் ஒதுக்கப்படவில்லை. கேரளா ரூ.24,000 கோடி சிறப்புத் தொகுப்பைக் கோரியிருந்தது.
விழிஞ்சம் அதன் தேசிய முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவற்றில் எதுவும் பட்ஜெட்டில் பரிசீலிக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. தொழிற்துறை ஓரங்கட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது கூட்டாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். ஒன்றிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.