கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முண்டக்காயத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் புல்லுப்பாறை அருகே சாலையில் இருந்து சுமார் 30 அடி கீழே கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து நடந்த போது பேருந்தில் 34 பயணிகளும் 3 பணியாளர்களும் இருந்தனர். இதனிடையே விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இணை போக்குவரத்து ஆணையருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டார்.