கேரளா குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்புகொண்ட அமித்ஷா – அதிரடி உத்தரவு!
கேரளா குண்டு வெடிப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு! பெண் ஒருவர் உயிரிழப்பு!
தற்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்துள்ளார். வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த பின், ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG (தேசிய புலனாய்வு முகமை), NIA (தேசிய பாதுகாப்பு படை) ஆகியவையும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.