I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்.? கெஜ்ரிவால் பதில்.!
சென்னை: I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இதுவரை அதற்கான விவாதம் நடைபெறவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் ஓர் நேர்காணலில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில், நாளை மறுநாள் (மே 25) 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பிரச்சார வேலைகளை அரசியல் தலைவர்கள் பல்வேறு விதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனமான PTIக்கு தேர்தல் நிலவரம் குறித்து பேட்டி அளித்து இருந்தார்.
இந்த நேர்காணலில் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கும் தனது பதில்களை கூறினார். அதில், குறிப்பாக, ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றும், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், பிரதமர் வேட்பாளர் பற்றிய விவாதம் நடைபெறவில்லை என கூறினார்.
மேலும், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்வது என்று எந்த விவாதமும் இதுவரை நடைபெறவில்லை என்றும், I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று கூறினார்.
I.N.D.I.A கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதனால், எங்களுக்கு பிரதமர் பதவி என்பதில் விருப்பம் இல்லை. இந்தியா கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை வென்று கூட்டணியாக ஆட்சி அமைக்கும். கூட்டணியில் நல்ல, நிலையான ஆட்சியை I.N.D.I.A கூட்டணி கொடுக்கும்.
தற்போதைய மக்களவைத் தேர்தல், நிலவும் சர்வாதிகார அரசிடம் இருந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவே நடத்தப்படுகிறது. இந்த ஆட்சி (பாஜக) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை அழித்துவிடுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் PTI நேர்காணலில் குறிப்பிட்டார்.
மேலும், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என்று கெஜ்ரிவால் கூறினார் . டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிக்கும் நாளை மறுநாள் (மே 25) தேர்தல் நடைபெற உள்ளது.